தகுதியுடையவர்களுக்கு பணி நிரந்தரம்.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்..!
தகுதியுடையவர்களுக்கு பணி நிரந்தரம்.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்..!

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்கள் சுமார் 100 பேர், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், செவிலியர்கள் போராட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 8 செவிலியர் சங்கங்கள் உள்ளது. இதில் யார் போராட்டம் நடத்துகின்றனர் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை.
நிதி நிலையைப் பொறுத்து படிப்படியாகத்தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். எம்.ஆர்.பி மூலம் தற்காலிகமாக பணிக்கு வந்தவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும்.
யாருடைய தூண்டுதலின் பேரிலும் வெயிலில் உடலை வருத்திக் கொண்டு செவிலியர்கள் போராட வேண்டாம். செவிலியர்களுக்கு எப்போது இந்த அரசு துணை நிற்கும்” என்று அவர் கூறினார்.

