தட்டிக்கேட்ட ஸ்விகி ஊழியரை தாக்கிய போலீஸ் பணியிடமாற்றம்!!
தட்டிக்கேட்ட ஸ்விகி ஊழியரை தாக்கிய போலீஸ் பணியிடமாற்றம்!!

சாலையில் சென்ற பெண்ணை இடித்துச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டிக் கேட்ட ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை தனியார் பள்ளி வாகனம் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும், இதற்கு நீதி வேண்டுமென கூறியிருந்தார்.
அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை வழிமறைத்து நிறுத்தி ஓட்டுநரிடம் மோகனசுந்தரம் கேட்டுள்ளார்.

அதற்கு போக்குவரத்து காவலர் ஒருவர், ‘இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்..?’ எனக் கேட்டு தாக்கியாக தெரிகிறது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு, தன்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து முதல்நிலைக் காவலர் சதீசை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in

