பைக் ரேஸ் வீராங்கனைக்கு ஆபாச மிரட்டல் விவகாரம்.. இளைஞர் அதிரடி கைது
பைக் ரேஸ் வீராங்கனைக்கு ஆபாச மிரட்டல் விவகாரம்.. இளைஞர் அதிரடி கைது

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ் வீராங்கனையை பின் தொடர்ந்து சென்று மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப் நடத்தி வருபவர் நிவேதா ஜெஸிகா. இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்ற இவர் கடந்த 11 ஆம் தேதி ட்விட்டரில் தெரிவித்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, கடந்த 10 ஆம் தேதி இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்து விட்டு தனது பைக்கில் வீட்டுக்கு செல்லும் போது, இளைஞர் ஒருவர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பின் தொடர்ந்துள்ளார். அந்நபர் ஆலந்தூர் வரை பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் நிவேதா கூறியிருந்தார்.
பின்னர், அந்த மர்ம நபர் மீண்டும் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் இரவு ஒரு மணி அளவில் லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும்போது தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாகவும், செல்போனை பறிக்க முயன்று மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து சென்னை காவல்துறை, நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டரில் பதில் அளித்து இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிவேதா ஜெஸிகா ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மர்ம நபர் சென்ற வழிதளத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற நபரை கைது செய்தனர்.
கைது செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன்(34) என்பதும் அவர் பாரிமுனையில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், பணி நேரம் முடிந்ததும் இவர் பார்ட் டைமாக ஓலா வாடகை பைக்கில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இவர் தொடர்ச்சியாக இதுபோல் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதும் அம்பலமானது. திருமணமாகி எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வெவ்வேறு பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து அதில் சந்தோஷம் அடைவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்திரகாசனிடம் ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

