Theme Check

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கனவு...ஆனா அது பலிக்காது - அண்ணாமலை..!!

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கனவு...ஆனா அது பலிக்காது - அண்ணாமலை..!!

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் கனவு...ஆனா அது பலிக்காது - அண்ணாமலை..!!
X

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளது. அது ஒரு பகல் கனவு நிதி நிலை அறிக்கையாகும். தமிழ்நாடு அரசின் கடன் தொகை ரூ. 6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது கடுமையான கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசு தான் அதிகளவில் கடன் வாங்கியுள்ளது. ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக காட்டுகிறார்கள். அது உண்மையாக இருந்தால் அடுத்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ரூ.80 ஆயிரம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியவர்கள், இப்படியொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது எப்படி நியாயமாகும்? தேர்தல் அறிக்கையில் மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக திமுக தெரிவித்தது. அதை நிறைவேற்றவில்லை. அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதை வரவேற்கிறோம். ஆனால், 36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1,000 கொடுக்க முடியுமா? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை வேறு திட்டத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

நிதி நிலை அறிக்கையில் தொலை நோக்கு பார்வையில்லை, தெளிவு, புரிதல் இல்லை. தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக கொடுத்துள்ளது. அதனால் தான் மாநில அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ஒன்றிய அரசு எந்த மாநிலத்துக்கும் நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பது இல்லை. ஒன்றிய அரசு எந்த மாநிலத்துக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை.

எதெற்கெடுத்தாலும் ஒன்றிய அரசு மீது பழிபோட்டு வந்த தமிழ்நாடு அரசு, நிதி நிலை அறிக்கையில் ஒன்றிய அரசு நிலுவை தொகையை வழங்கியதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி புதிய திட்டம் போல் அறிவித்துள்ளனர். திட்டங்களுக்கு எந்த பெயர் சூட்டினாலும் தமிழ்நாட்டு மக்கள் பயன் பெற்றால் போதும். தமிழ்நாட்டை கடன் சுமையிலிருந்து வெளியே கொண்டு வந்து வருவாயை பெருக்க புதிய வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக தமிழ்நாடு ஆளுனரிடம் மார்ச் 21-ம் தேதி புகார் அளிக்கவுள்ளோம். பிஜிஆர் நிறுவனத்தில் சோதனையிட வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு வித்தியாசமான அரசு என்பதை நிரூபிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

பிரதமர், துணை பிரதமர் கனவில் பல தலைவர்கள் உள்ளனர். இந்த கனவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் உள்ளனர். எப்படியிருந்தாலும் 400 எம்பிக்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.

Next Story
Share it