இளவரசி பரபரப்பு வாக்குமூலம்!! சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்..!!
இளவரசி பரபரப்பு வாக்குமூலம்!! சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை.
இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து உள்ளது. அவர்கள் அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சசிகலா தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அளித்து இருந்தது.
அதை ஏற்று இளவரசி இன்று காலை 10.12 மணிக்கு ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜரானார்.
இளவரசியிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இளவரசி பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு சிறைக்கு சென்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார். நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என இளவரசி வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தக்கட்டமாக இளவரசியிடம் குறுக்கு விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வாக்குமூலம் அளிப்பதால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

