பிரபல சீரியல் நடிகரின் மனைவி மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் !!
பிரபல சீரியல் நடிகரின் மனைவி மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் !!

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக, மறைந்த நடிகரின் இரண்டாவது மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவர் மீது பெண்கள் தொடர்பான பல்வேறு புகார்கள் காவல்நிலையங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வாராகி விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
சுஜிதா பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரசாத்தின் மனைவி ஆவார். ஆனால் நடிகர் சாய் பிரசாத் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார். சுஜிதா தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வாராகி வற்புறுத்தியதால், மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது செய்தனர். இவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள வராகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சாய் பிரசாத்தின் இரண்டாவது மனைவி தன்னோடு 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் கடன் அதிகமாகி வட்டி மற்றும் இஎம்ஐ செலுத்த வேண்டிய காரணத்தினால், உடனடி கடனாக இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டதாக தெரிவித்துள்ளார். ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவர்கள் ஆபாசமாக போட்டோ வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக சுஜிதா தனக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு நாட்களில் பணத்தைத் திருப்பித் தருவதாக கூறியதால், மகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியதாக கூறியுள்ளார். அவ்வாறு உதவிக்காக கொடுக்கப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டபோது தொடர்ந்து அலைக்கழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், பணத்தை கேட்காமல் இருப்பதற்காகவே தன் மீது பொய் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் கடன் வாங்கியதால் மர்ம நபர்கள் ஆபாச வீடியோ போட்டோ அனுப்பி மிரட்டுவது தொடர்பான விபரங்கள் தொடர்பாக தனக்கு சுஜிதா அனுப்பிய வாடஸ்அப் சாட்கள் மற்றும் கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டு பணம் கேட்ட ஆடியோவையும் ஆதாரமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்டு பொய் புகார் அளித்த மறைந்த சாய் பிரசாத் என்ற நடிகரின் இரண்டாவது மனைவி சுஜிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

