மக்களை திசை திருப்பும் விளம்பரங்களுக்கு தடை... ஒன்றிய அரசு அதிரடி!
மக்களை திசை திருப்பும் விளம்பரங்களுக்கு தடை... ஒன்றிய அரசு அதிரடி!

புகையிலை தயாரிப்பு பொருட்களான சிகரெட், மெல்லும் புகையிலை, கைனி, ஹான்ஸ், பான்மசாலா, பான்பராக் போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக இது தொடர்பான விளம்பரங்களுக்கு தடை உள்ளது.
இருப்பினும் குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட பிராண்டை நினைவுபடுத்தும் வகையில் சோடா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் ஊடகங்களில் வலம் வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்துள்ளது. சரியான தகவல் பெறும் உரிமை தெரிவு செய்யும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறுவதாக இத்தகைய விளம்பரங்கள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம் இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

