பொதுமக்களே உஷார்.. ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் திருட்டு.. ஒருவர் கைது..!
பொதுமக்களே உஷார்.. ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் திருட்டு.. ஒருவர் கைது..!

வேலூர் மாவட்டத்தில் வேலூர், கணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதி ஏடிஎம் இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன.
வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இயந்திரத்தில் பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவப்பட்டு இருந்ததும், ஒரே ஆசாமி இதை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் ஏடிஎம் மையங்களை கண்காணித்தனர். அப்போது, காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இரவு 10 மணியளவில் நுழைந்த ஒருவரை போலீசார் பிடித்தனர்.
அவர், பெங்களூரு ஒயிட் கார்டனைச் சேர்ந்த திம்மராயப்பா (37) என்பதும், ஏடிஎம் திருடன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 44 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது; ‘திம்மராயப்பா, இரண்டு இயந்திரங்கள் உள்ள ஏடிஎம் மையத்தில் நுழைவார். ஒன்றில், பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவி விட்டு, மற்றொரு இயந்திரத்தின் அருகில் நிற்பார்.
அப்போது வரும் வாடிக்கையாளர் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துக் கொள்வார். வாடிக்கையாளர் பணத்தை எடுத்தவுடன், கார்டை எடுக்க முயல்வார்.
பசை ஒட்டி உள்ளதால் வெளியே எடுக்க முடியாது. இயந்திரம் பழுதடைந்து விடும். வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் தெரிவித்து விட்டு சென்று விடுவார்.
அதன்பின்னர் திம்மராயப்பா, கம்பி மூலமாக கார்டை எடுத்து, வேறு மையத்துக்கு சென்று வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்.
இப்படி, கடந்த ஆறு மாதங்களில் 44 கார்டுகளை பயன்படுத்தி, 30 ஏடிஎம் மையங்களில் 10 லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்’ என்று கூறினர்.

