Theme Check

பொதுமக்கள் அதிர்ச்சி.. மின் கட்டணம் உயர்வு..!

பொதுமக்கள் அதிர்ச்சி.. மின் கட்டணம் உயர்வு..!

பொதுமக்கள் அதிர்ச்சி.. மின் கட்டணம் உயர்வு..!
X

கர்நாடக மாநிலத்தில், கர்நாடக மின் பகிர்மான கழகம், மங்களூரு மின்வினியோக கழகம், பெங்களூரு மின்வினியோக கழகம், உப்பள்ளி மின்வினியோக கழகம், கலபுரகி மின் பகிர்மான கழகம், சாமுண்டீஸ்வரி மின்வினியோக கழகம் ஆகிய மின் பகிர்மான கழகங்கள் மூலம் மாநிலம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த மின் பகிர்மான கழகங்கள், நடப்பாண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி வந்தன.

அதன்படி, கர்நாடகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 35 பைசா கட்டணம் அதிகரித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மஞ்சுநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

“கர்நாடகத்தில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள், தங்களுக்கு ரூ.2,159 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 185 பைசா உயர்த்துமாறும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, சராசரியாக மின் கட்டணம் யூனிட்டுக்கு 35 பைசா உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மின் கட்டணம் 4.33 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும், உறுதி செய்யப்பட்ட கட்டணத்தை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மின் விநியோக நிறுவனங்களின் மின் விற்பனை 7,228 மில்லியன் யூனிட்டாக குறைந்துள்ளது.

இதனால் விநியோக நிறுவனங்களுக்கு வருவாய் ரூ.6,182 கோடி குறைந்துள்ளது. அதே போல் கடந்த 2021-ம் ஆண்டு மின்சாரம் கொள்முதல் செய்யும் செலவும் யூனிட்டுக்கு 31 பைசா அதிகரித்துள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தற்போதைய கட்டணமே நீடிக்கும். சிறு-குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 50 பைசா தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி சலுகை அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.

கர்நாடகத்தில் 33.15 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.13 ஆயிரத்து 638 கோடியாக அதிகரித்துள்ளது.

உபரி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6 என்ற அளவில் விற்பனை செய்ய மின் வினியோகம் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

கர்நாடகாவில் பெட்ரோல் - டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதுபோல், வர்த்தக சிலிண்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Next Story
Share it