பொதுமக்களே, இது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வரை பரிசு.. அரசு அறிவிப்பு..!
பொதுமக்களே, இது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வரை பரிசு.. அரசு அறிவிப்பு..!

வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வணிக வரித் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது; “2022 - 2023-ம் நிதியாண்டில் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையின்போது, வரி ஏய்ப்பு குறித்து வணிக வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரி ஏய்ப்பை சிறப்பாக கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வணிக வரித்துறை ஆணையர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அதன் மூலம் வரி வசூல் செய்யும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10 சதவீதம் வெகுமதியாக தரப்படும்.
அதேபோன்று, இடைக்கால வெகுமதியாக 5 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் தருவதாக இருப்பின் வணிக வரிகள் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தனிநபர் அல்லது தகவல் அளிப்பவர்களின் குழுவிற்கு வெகுமதி அளிக்கப்படும்.
அதே நேரத்தில், அரசு அலுவலராக இருப்பின், அதாவது ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூ.1,00,000க்கு மிகாமல் அனுமதிக்கப்படும். வெகுமதியாக ரூ.4,00,000 வரை ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவிற்கு, அரசாங்கத்தின் ஒப்புதலுடன், வணிக வரித்துறை ஆணையர் சிபாரிசின் பேரில் அனுமதிக்கப்படலாம். ஒரு அதிகாரி ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர்.
இதற்கான வெகுமதிகளை சென்னை-1, சென்னை-2, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் போன்ற அலுவலகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும். தகவல் தருபவர்களுக்கு ரூ.62 லட்சம், அதிகாரிகளுக்கு ரூ.1.04 கோடி மொத்தம் ரூ.1.66 கோடி வழங்க வேண்டும்.
வணிக வரி ஆணையரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு ரூ.1.66 கோடியை 2022 - 2023-ம் நிதியாண்டிற்கான தகவல் வழங்குபவர்கள் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்க ஆணையிடப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

