#BREAKING:- ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
#BREAKING:- ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக கடந்த 1989-ல் 25,354 மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த 1997 பிப்ரவரியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், 2006 ஜூனில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை அளித்தார் கலைஞர். ஊராட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 12,618 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2011 நவம்பரில் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா.
கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ 7,500 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்” என்று அவர் கூறினார்.

