2004 சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம்.. நெகிழ்ச்சியான தருணம் !!
2004 சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம்.. நெகிழ்ச்சியான தருணம் !!

சுனாமி பேரலையில் இருந்து மீட்கப்பட்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அரவணைப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு திருமணம் நடைபெற்றது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையை யாரும் மறந்திருக்க முடியாது. ஆயிரக்கணக்கான மக்களை இழுத்துச்சென்ற பேரலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் சுனாமியின் தாக்கம் இன்னமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும், உறவுகளை இழந்தும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த வகையில், சுனாமி அலையில் இருந்து மீட்கப்பட்டு அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் வளர்ந்த 9 மாத குழந்தை சவுமியா மற்றும் 3 மாத குழந்தை மீனா ஆகிய இருவரையும் அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த தற்போதைய மருத்துவத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார்.
சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், மாதந்தோறும் நாகை வந்து குழந்தைகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியில் ராதாகிருஷ்ணன் பங்களிப்பை செலுத்தி வந்தார். இதனால் எப்போதும் அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார் ராதாகிருஷ்ணன்.

இந்த நிலையில், குழந்தைகளாக இருந்த சவுமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் இப்போது 18 வயதை கடந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. தத்தெடுத்து வளர்த்து வந்த நாகையைச் சேர்ந்த மலர்விழி, மணிவண்ணன் தம்பதியர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். மருதுதுவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சவுமியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் அங்கிருந்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
newstm.in

