கோவையை மறந்த ரயில்வே.. கோடை விடுமுறையை கொண்டாடுவோர் அதிருப்தி..!
கோவையை மறந்த ரயில்வே.. கோடை விடுமுறையை கொண்டாடுவோர் அதிருப்தி..!

ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். இதையடுத்து, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதையொட்டி பஸ், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அலைமோதும். கோடை கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இதே போல், ரயில்வே துறையும் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியுள்ள நிலையில், கோடை விடுமுறைகள் விரைவில் வரவுள்ளன. கொரோனாவால், பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கழிக்க பலரும் தற்போதே திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்காடு, எர்ணாகுளம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், தொழில் நகரமான கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோவை ரயில்வே ஸ்டேஷன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், சிறப்பு ரயில் இயக்குவதில் அக்கறை இல்லை. இது, பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

