120 கிலோ தங்கத்தில் ராமானுஜர் சிலை.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்..!
120 கிலோ தங்கத்தில் ராமானுஜர் சிலை.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்..!

கி.பி.1017-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்தவர் ராமானுஜர். தீவிர வைணவரான இவர், சமூக கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும், மதத்திலும் புரட்சியை ஏற்படுத்தியவர்.
அத்துடன், சமூக மறுமலர்சிக்கு பாடுபட்ட ராமானுஜர், பல லட்சம் அடித்தட்டு மக்கள், பிறப்பு, கல்வி, பொருளாதாரம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை தடுக்கப் போராடியவர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான முச்சிந்தல் கிராமத்தில் உள்ள ஜீவா ஆசிரமத்தில், ஆன்மிகப் பெரியவர் ராமானுஜரின் புகழைப் போற்றும் விதமாக சமத்துவ சிலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 120 கிலோ தங்கத்தில் ராமானுஜரின் திருவுருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.
சமத்துவ சிலை வளாகத்தின் உள் கருவறைப் பகுதியில், பரந்த தியான மண்டபத்தை நோக்கியதாக இச்சிலை அமைந்திருக்கிறது. பக்தர்கள் இந்த தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடலாம்.
முச்சிந்தல் ஆசிரமத்தில் ராமானுஜரின் தங்கத்தாலான திருவுருவச் சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்து வணங்கினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

