வைரலாகும் பதிவு..!! கண்ணாடி துண்டில் கடைக்காரருக்குத் திருடன் எழுதிவைத்த குறிப்பு..!!
வைரலாகும் பதிவு..!! கண்ணாடி துண்டில் கடைக்காரருக்குத் திருடன் எழுதிவைத்த குறிப்பு..!!

கேரள மாநிலம் வயநாட்டு மாவட்டம் குந்நங்குளம் பகுதியில் கடந்த 10-ம் தேதி அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இரண்டு கடைகளில் கைவரிசை காட்டிய திருடன், மூன்றாவதாக துணி கடையில் திருட முயன்றுள்ளார். அப்போது, கடையின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் மிரண்டு போயிருக்கிறார்.

கடையில் திருட எதுவும் இல்லாமல் போனதும், கல்லாப்பெட்டியும் காலியாக இருந்ததால் விரக்தியடைந்த திருடன், உடைந்த கதவின் கண்ணாடி துண்டில் கடையின் உரிமையாளருக்கு குறிப்பு எழுதி வைத்து சென்றிருக்கிறார்.
அதில் , “கடைக்குள் எதுவும் இல்லை என்றால் எதற்காக கடையை மூடினாய், கண்ணாடிக் கதவாச்சும் தப்பித்து இருக்கும்” என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்பேட்டா போலீசார் கடையின் சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடையில் திருட வந்தவர் வயநாடு, களிப்பறம்பு பகுதியை சேர்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது. விசாரணையில் கேரளா முழுவதுமாக 60-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் வயநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த திருடன் விஸ்வராஜை மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கண்ணாடி துண்டில் கடைக்காரருக்குத் திருடன் எழுதிவைத்த குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

