உயருது ஆட்டோ கட்டணம்.. கிலோ மீட்டருக்கு எவ்வளவு தெரியுமா..?
உயருது ஆட்டோ கட்டணம்.. கிலோ மீட்டருக்கு எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயித்தது. அத்துடன், கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது.
மேலும், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாயாகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்னர் விலைவாசி உயர்ந்ததால், அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுநர்கள் மதிக்கவில்லை. அதே நேரத்தில், 'ஓலா உபர்' உள்ளிட்ட தனியார் செயலி வழி நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின. தற்போது, 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன.
இதை பயன்படுத்தி செயலி நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் அதிக கமிஷன் வசூலிக்க துவங்கி உள்ளன. அதேபோல், பயணிகளிடமும் ரத்து கட்டணம், விடுமுறை கட்டணம், புறநகர் கட்டணம் என வெவ்வேறு வகையில் பணம் பார்த்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து 'டிஜிட்டல் மீட்டர்'களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் என ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில், மறுசீரமைப்பு கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும் படி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 1.5 கிலோ மீட்டருக்கு உள்ளான தூரத்துக்கு கட்டணமாக 40 ரூபாய்; கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: ‘தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் நேரத்துக்கும் தூரத்துக்குமான வேறுபாடுகளை ஒப்பிட்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்கள் வழங்க வேண்டும்” என்றனர்.
Next Story

