தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடனுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!
தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடனுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

“தொழில் தொடங்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடன் உதவி கோரி விண்ணப்பிக்கலாம்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் தமிழக அரசின் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் என்றால் 35 வயதுக்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் எனில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய - மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடன் உதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து, ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை - 630 562 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33991, 89255 33990 மற்றும் 89255 33989 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

