வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 ஆயிரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!
வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 ஆயிரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24 வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் சமீஹா பர்வீன் (19), ஆர்.சினேகா (25), அனிகா (18), மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன் (19), ஆர்.சுதன் (24), பிரித்வி சேகர் (29), ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீரர் - வீராங்கனைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் கடந்த 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, பிரேசில் செல்ல அரசு சார்பில் விமானக் கட்டணம் மற்றும் உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் வீரர் - வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பும் வரையில், தகவல் தொடர்பு கொள்ள வசதியாக வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் .விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


