முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்.. இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்..!
முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்.. இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்..!

உக்ரைன் - ரஷ்யா இடையே 5வது நாளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகிறது. இதில், ‘பெலாரஸில் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்; அதற்கு சம்மதம் என்றால் தயாராக இருக்கிறோம்’ என ரஷ்யா தெரிவித்திருந்தது.
ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “பெலாரஸ் பகுதி வேண்டாம்; வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு இதில் ஏதேனும் ஒரு பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யா தென் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு 352 மக்கள் உயிரிழந்ததாகவும், ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு செய்து, பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசினார். அதன் பின் எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும், உக்ரைன் - பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் இன்று அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது.
இதற்கு முன் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகம் தவிர மற்ற 11 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

