சாமி கும்பிட்டுவிட்டு பெட்ரோல் பங்க்-இல் திருடிய நபர்!!
சாமி கும்பிட்டுவிட்டு பெட்ரோல் பங்க்-இல் திருடிய நபர்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்-ல் நள்ளிரவில் சாமி கும்பிட்டு விட்டு, திருடிச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
எட்டயபுரம் சாலையில் உள்ள ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்-இல் நள்ளிரவுக்கு மேல் பெட்ரோல், டீசல் போடுவதற்கு யாரும் வரவில்லை என்பதால் பெட்ரோல் பங்க் அறையில் ஊழியர் வேல்முருகனும், வெளியில் உள்ள சேரில் ஊழியர் கிருஷ்ணனும் தூங்கினர்.
இந்நிலையில் அதிகாலையில் வேல்முருகன் எழுந்து பார்த்த போது பெட்ரோல், டீசல் பணம் வசூலிக்கும் பையில் இருந்த 8 ஆயிரம் பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வேல்முருகன், தனது உரிமையாளருக்கும் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பல்க்கில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, ஒரு இளைஞர் பெட்ரோல் பங்க் முன்பு பைக்கினை நிறுத்தி விட்டு, கையெடுத்து கும்பிட்டு விட்டு, பணத்தை திருடியது தெரியவந்தது.
போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, அது குமரெட்டியபுரம் என்ற பட்டியூர் கிராமத்தினை சேர்ந்த ரமேஷ்குமார் (32) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.
6 ஆயிரம் பணம் மற்றும் பைக்கினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ்குமார் மீது விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் காவல் நிலையங்களில் திருட்டு,வழிப்பறி, மிரட்டல் என 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

