வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான உதவித் தொகை அறிவிப்பை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஜூன் 30ஆம் தேதியன்று ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து இருக்க வேண்டும். முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதியுடையவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் எழுத படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் மேல்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று (30-06-2022) அன்று ஓர் ஆண்டு முடிந்த பதிவுகாரர்கள் தகுதி உடையவர்.
மேலும்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது வரையிலும் இதர பிரிவினர் 40 வயது வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.
பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிலையங்களிலும் பயிலக் கூடாது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாய மற்றும் சட்டம் போன்ற தொழில்படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்க இயலாது.

பொது பிரிவினர் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 300 ரூபாயும், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும் மாதம் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளில் எழுதப் படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைப்பள்ளி வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 750 ரூபாயும் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை அசல், பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in

