பள்ளிகள் திறப்பு.. எகிறியது எழுது பொருட்களின் விலை.. கவலையில் பெற்றோர்..!
பள்ளிகள் திறப்பு.. எகிறியது எழுது பொருட்களின் விலை.. கவலையில் பெற்றோர்..!

தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுதினம் (13ம் தேதி) பள்ளிகள் திறக்க உள்ளன. அனைத்து வகுப்புக்கான புத்தகங்களும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
நோட்டு, பேப்பர், பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை வெளி கடைகளில் பெற்றோர் வாங்கித் தருகின்றனர். எனவே, விற்பனையை எதிர்பார்த்து கூடுதலாக நோட்டுக்களை ஸ்டேஷனரி கடை வியாபாரிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
இது குறித்து ஸ்டேஷனரி பொருட்கள் வியாபாரிகள் கூறியதாவது: ‘கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளி திறப்பு தேதி முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது.

நடப்பாண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பே பள்ளி கோடை விடுமுறை எப்போது, பள்ளி திறப்பு எப்போது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லை. நடப்பாண்டு ஜிஎஸ்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 20 முதல் 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
இதன்படி, 28 முதல் 32 ரூபாய் வரை விற்கப்பட்ட பெரிய நோட்டு, 36 முதல் 38 ரூபாயாக உயர்ந்துள்ளது. 15 முதல் 22 ரூபாய்க்கு விற்ற நோட்டின் விலை 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. பேனா, பென்சில், ரப்பர், ஜாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ஸ்கூல் பேக், ரகத்தைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டும் மாணவர்களுக்கு பேக் வழங்க இருப்பதால் பெற்றோர் பலர் புதிய பேக் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை’ என்று கூறினர்.
நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

