தொடரும் அவலம்! கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!!
தொடரும் அவலம்! கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!!

புதுச்சேரியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இதுவரை இதற்கு உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்போ அல்லது மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. அதனால் தற்போது மீண்டும் உயிரை காவு வாங்கியுள்ளது கழிவுநீர் தொட்டி.
புதுச்சேரி அருகே திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (47) என்ற கூலித் தொழிலாளி திருபுவனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றார்.

அப்போது கழிவுநீர் தொட்டியை திறந்தவுடன் விஷ வாயு தாக்கியதில், மயக்கமடைத்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருபுவனை போலீசார் ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

