அதிர்ச்சி! கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 4 பேர் பலி!!
அதிர்ச்சி! கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 4 பேர் பலி!!

50 அடி ஆழ கழிவுநீர் குழியில் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் புத்தக்கேரா கிராமத்தில் பாதாளச் சாக்கடையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடைப்பு இருந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததால், நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4 ஊழியர்களை அங்கே வரவழைத்து அவர்களை சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு கூறினர். அதன்படி அவர்களும் சாக்கடைக்குள் ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர்.

ஆனால், இறங்கி பல நிமிடங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள், உள்ளே எட்டிப் பார்த்த போது அவர்கள் பேச்சு - மூச்சு இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு வந்து முறையான முகக்கவசங்களை அணிந்து சாக்கடைக்குள் இறங்கி அவர்களை மீட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொழிலாளர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்களை விசாரித்து வருகின்றனர்.
newstm.in

