குரங்கு அம்மை பரவல் – உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்!!
குரங்கு அம்மை பரவல் – உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்!!

குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாநில சுகாதாரத்துறைகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி உலகம் முழுவதும் 50 நாடுகளில் ஜனவரி 1 முதல் ஜூன் 22ஆம் தேதி வரை 3,411 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 86% பாதிப்பு ஐரோப்பிய கண்டத்திலும், 11% பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பும் பயணிகளை விமான நிலையத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குரங்கு அம்மை நோய் குறித்து பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மாநில சுகாதாரத் துறையை மத்திய சுகாதாரத்துறை உஷார் படுத்தியுள்ளது.
குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவை தவிர குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் குடல்புண் நோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்படி செய்யும் பட்சத்தில் குரங்கு அம்மை நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
ஏதேனும் மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அதனை தெரியப்படுத்த வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு தேவையான படுக்கைகள் மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா பெருந் தொற்று உள்ள சூழலிலும் குரங்கு அம்மை போன்ற வேறு நோய்கள் கண்டறியப்பட்டாலும் அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
newstm.in

