உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த மாணவர் உடல் சொந்த ஊர் வந்தது.. முதல்வர் அஞ்சலி !!
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த மாணவர் உடல் சொந்த ஊர் வந்தது.. முதல்வர் அஞ்சலி !!

ரஷ்யப் படையினர் உக்ரைன் மீது கடந்த மாதம், பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போரில் ஏராளமான பொருள் சேதங்கள், உயிர்ச் சேதங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. மேலும் பல லட்சம் உக்ரேனியர்கள் சொந்த வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து மீட்டது. இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நவீன் குடும்பத்தினரும், கர்நாடக முதலமைச்சரும் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் ஏற்பாடுகள் மூலம், நவீன் சேகரப்பாவின் உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தது.
விமான நிலையத்தில் நவீன் உடலுக்கு, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரியாதை செலுத்தினார். இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு நவீன் உடல் வைக்கப்படுகிறது.

இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் முன்னதாக கூறியபடியே, மருத்துவப் படிப்புக்காக நவீனின் உடல் எஸ்.எஸ் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்படும் என அவரின் தந்தை சங்கரப்பா தெரிவித்துள்ளார்.
newstm.in

