மாணவி மரணம்.. கலவரமாக மாறிய சாலை மறியல்: போலீசார் துப்பாக்கிச்சூடு !!
மாணவி மரணம்.. கலவரமாக மாறிய சாலை மறியல்: போலீசார் துப்பாக்கிச்சூடு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த புதன்கிழமை பள்ளிக் கட்டிடத்தின் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
இந்த சூழலில் மாணவியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் நான்குமுனை சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. பிரேத பரிசோதனை அறிக்கை இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் உள்ள அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளது. வலதுபுற விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதியில் காயம், எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆடைகளில் ரத்தக்கரை உள்ளது. பல காயங்கள் காரணமாக அதிக ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இறுதிக் கருத்து உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை நிலுவையில் உள்ளது. அந்த அறிக்கையின் முடிவு வந்ததும், மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.

மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு முதல் விடிய விடிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை போராட்டக்காரர்கள் தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பள்ளி மீது கல்வீச்சினர். பள்ளி வாகனங்களை தீ வைத்து எரித்தனர். 3க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியே கலவர பூமியாக மாறியது. இதனால் விழுப்புரம் சரக டிஐஜி பண்டியன் உள்ளிட்ட போலீசார் மற்றும் மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை, பள்ளிக்கூடம் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கல்வீச்சில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

