மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!
மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (19-ம் தேதி) உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதியில் கல்லூரிகள் கேட்கின்றீர்கள்.
பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.
கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 55 அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவு கொண்டு வரப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வரப்படும்.
வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால், ஊட்டி தொகுதி குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார்.

