Theme Check

நகைக் கடன் தள்ளுபடி வழக்கில் திடீர் திருப்பம்.. ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ்..!

நகைக் கடன் தள்ளுபடி வழக்கில் திடீர் திருப்பம்.. ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ்..!

நகைக் கடன் தள்ளுபடி வழக்கில் திடீர் திருப்பம்.. ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ்..!
X

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி என்ற தமிழக அரசின் உத்தரவு தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், “கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்ட நகைக்கடன்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு பொது நலனுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021 - 2022-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளது.

நகைக்கடனுக்கான வட்டி மற்றும் அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்த தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்ப நடைமுறையை சிதைக்கும் வகையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய நகைக்கடன் தள்ளுபடிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. எனவே, தமிழக அரசின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்த மனுதாரர், இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story
Share it