சாதி ரீதியாக மாணவர்களிடம் பேச்சு – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!
சாதி ரீதியாக மாணவர்களிடம் பேச்சு – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மாணவருடன் சாதி தொடர்பாக பேசியதாக வெளியான ஆடியோ சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை கலைச்செல்வி, முனீஸ்வரன் என்ற மாணவரிடம் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மாணவனிடம் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரை சொல்லி இவர்களை பிடிக்குமா என்று கேட்பதும் அதில் இடம் பெற்றுள்ளது.
மாணவரின் ஊரான புளிங்குளத்தினை சேர்ந்தவர்களை சில ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என்று கூறுவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தொனியில் மாணவரிடம் அந்த ஆசிரியை பேசுகிறார்.

பள்ளியில் நடைபெறவுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலுக்காக மாணவரிடம் இந்த உரையாடல் நடத்தப்படுகிறது. இது குறித்து கலைச்செல்விடம் கேட்ட போது, அது தனது ஆடியோ இல்லை, எடிட் செய்துள்ளனர் என்றார்.
நல்ல முறையில் பாடம் நடத்துவேன், மாணவர்கள் என்ன சாதி என்று கூட தெரியாது, மாணவர்களிடம் கண்டிப்பாக இருப்பேன், தன்னை பிடிக்காதவர்கள் இது போன்று செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி , உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியை மீனா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
newstm.in

