வரும் 28ம் தேதி முதல் டீ, காபி விலையும் உயர்கிறது..!
வரும் 28ம் தேதி முதல் டீ, காபி விலையும் உயர்கிறது..!

எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீ, காபி, ஸ்நாக்ஸ் விலை உயர்த்தப்படுவதாக பேக்கரி, டீ, காபி பார் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், திருப்பூர் மாவட்ட பேக்கரி, டீ, காபி பார் உரிமையாளர் சங்க துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், “நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 105 ரூபாய் அதிகரித்து, 2,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல், வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 ரூபாய் அதிகரித்து, 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 137 நாட்களாக மாற்றம் இல்லாமல் காணப்பட்ட பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக எரிவாயு, எண்ணெய் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக பேக்கரி மற்றும் டீக்கடைகளை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த விலையேற்றத்தை சமாளிக்க, வரும் 28-ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் டீ 12 ரூபாய், காபி 20 ரூபாய், போண்டா, பஜ்ஜி, வடை ஆகிய பலகாரங்கள் 8 ரூபாய், வெஜிடபிள் பப்ஸ் 15 ரூபாய், காளான் மற்றும் முட்டை பப்ஸ் 20 ரூபாய் என விலை அமல்படுத்த உள்ளது” என்று கூறினார்.

