விமான நிலையத்தில் பதற்றம்.. 45 துப்பாக்கிகளுடன் சிக்கிய தம்பதி !!
விமான நிலையத்தில் பதற்றம்.. 45 துப்பாக்கிகளுடன் சிக்கிய தம்பதி !!

இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் படிபடியாக அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். வடமாநிலங்களில் சாலையில் வைத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். அங்கு துப்பாக்கிகள் எளிதாக கிடைப்பதாகவும், நாடு முழுவதும் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. எனவே துப்பாக்கி பயன்படுத்தினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியர் பெயர் ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கவுர் என விசாரணையில் தெரியவந்தது. கடந்த 10ஆம் தேதி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியா திரும்பிய அவர்கள், சுங்கத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜக்ஜித் சிங் இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளார். விசாரணையில், அந்த துப்பாக்கிகளை அவருக்கு அவரது சகோதரர் மஞ்சித் சிங் கொடுத்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

