மகாராஷ்டிராவில் பதற்றம்..!! நாசிக் அருகே ஆப்கான் மதகுரு குவாஜா சையத் சிஷ்டி சுட்டுக் கொலை!!
மகாராஷ்டிராவில் பதற்றம்..!! நாசிக் அருகே ஆப்கான் மதகுரு குவாஜா சையத் சிஷ்டி சுட்டுக் கொலை!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த குவாஜா சையத் சிஷ்டி (35) வசித்து வந்தார். ‘சுபிபாபா’ என அழைக்கப்பட்டு வந்த இவர், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இஸ்லாமிய கருத்துகளை எடுத்து உரைத்துள்ளார்.

இந்த நிலையில், யோலா நகரில் நேற்றிரவு குவாஜா சையத் சிஷ்டி காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தொடர்ந்து அவரை துப்பாக்கியால் சுட்டதில் நெற்றியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் அவரது காரை எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குவாஜா சையத் சிஷ்டி உடலை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

குவாஜா சையத் சிஷ்டி சர்ச்சைக்குரிய விஷயங்களில் எதுவும் சிக்கவில்லை. இதனால் மதம்சார்ந்து கொலை நடக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர். மேலும் பதற்றம் நிலவுவதால் நாசிக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

