இரவில் பயங்கரம்.. அடுத்தடுத்து கீழே விழுந்து மூன்று பேர் உயிரிழப்பு !
இரவில் பயங்கரம்.. அடுத்தடுத்து கீழே விழுந்து மூன்று பேர் உயிரிழப்பு !

இரவில் வேட்டைக்கு சென்ற மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (45), வெங்கடேசன் (44) சுப்பிரமணி (38). இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இரவில் அவ்வப்போது வேட்டைக்கு செல்வது வழக்கம். இரவில் வேட்டைக்கு சென்று காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வேட்டைக்குச் சென்றனர். அந்த பகுதியில் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான பத்மநாபன் என்பவர் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இதனை கவனிக்காமல் வேட்டைக்கு சென்ற 3 பேரும் நிலத்தை கடக்கும்போது மின்வேலியில் சிக்கினர்.

இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி பத்மநாபனை தேடி வருகின்றனர்.
newstm.in

