Theme Check

கிண்டி அருகே பயங்கர தீ விபத்து..!!

கிண்டி அருகே பயங்கர தீ விபத்து..!!

கிண்டி அருகே பயங்கர தீ விபத்து..!!
X

சென்னை கிண்டி பகுதியில் பிரபல ராயல் லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு பின்புறமுள்ள காலி இடத்தில் நகர்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் ஒரு இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு தேங்கியிருந்த குப்பைகளை எரிக்க தீயிடப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகாமையிலுள்ள குப்பைகளும் சேர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பரங்கிமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்த கோயம்பேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனம் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகில் குடியிருப்புகளோ, வேறு கடைகளோ இல்லாத காரணத்தினால் எந்தவித பாதிப்பும், உயிர் சேதமும் இந்த தீவிபத்தால் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட இடம் குப்பை மேடு என்பதால் அடிக்கடி இதேபோன்ற தீ விபத்து சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அங்கு இருக்கும் குப்பைகளை பாதுகாப்பான முறையில் அகற்ற பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். தீவிபத்து சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it