ரிசல்ட் வந்தால் திட்டுவார் என்பதால் அப்பாவை தீர்த்துக்கட்டிய சிறுவன்
ரிசல்ட் வந்தால் திட்டுவார் என்பதால் அப்பாவை தீர்த்துக்கட்டிய சிறுவன்

15 வயது சிறுவன் ஒருவன் தான் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தந்தையை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியை சேர்ந்தவர் துலிச்சந்த் அகிர்வார். இவர் கடந்த 3ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்மமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் மிரண்டுபோயினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, துலிச்சந்த் கொல்லப்பட்ட சமயத்தில் பக்கத்து விட்டு நபரான விரேந்திரா அகிர்வாரும், அவருடன் இன்னொருவரும் தனது வீட்டில் இருந்து வெளியேறியதை தான் பார்த்ததாக அவரது மகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசாரின் சந்தேகம் விரேந்திரா மீது திரும்பியது.உடனடியாக விரேந்திராவை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். எனினும் அவர்கள் கொலை செய்யவில்லை என்பது விசாரணையில் உறுதியானது. இதனிடையே, தடயவியல் ஆய்வின் மூலம் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட துலிச்சந்தின் மகனிடம் போலீசார் பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், பதைபதைத்த அந்த சிறுவன், நடந்த அனைத்தையும் கூறியதைகேட்டு போலீசார் மிரண்டுபோயினர், அதாவது, தனது தந்தை தான் சரியாக படிக்காததற்காக தன்னை அடிக்கடி திட்டி வந்ததாகவும், மேலும் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று அச்சுறுத்தியும் வந்துள்ளார். நானும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை, இதனால் தேர்வில் தோல்வியடைந்து விடுவேனோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக தந்தையை கொலை செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்.

அதன்படி, அவர் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரை வெட்டிக் கொன்றேன். மேலும், எங்கள் பக்கத்து வீட்டாரோடு ஏற்கனவே எங்களுக்கு பாதாள சாக்கடை விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டேன். சம்பவம் நடந்த போது பக்கத்து வீட்டுக்காரர் அங்கிருந்து சென்றதை பார்த்ததாக போலீசாரிடம் சாட்சி கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அந்த சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். தேர்வு தோல்வி பயத்தில் 15 வயது சிறுவன் தனது தந்தையை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

