ஜெராக்ஸ் மெஷின் வைத்து கள்ள நோட்டு தயாரித்த கும்பல்!!
ஜெராக்ஸ் மெஷின் வைத்து கள்ள நோட்டு தயாரித்த கும்பல்!!

புதுச்சேரியில் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து மதுபானங்கள் வாங்க முயன்றது தொடர்பாக, ஜெயபால், மனோஜ், அவர்களுக்கு கள்ளநோட்டுகளை வழங்கிய சரண், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கமல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் கூடுதல் விசாரணைக்காக கமல், பிரதீப்குமார் இருவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இருவரையும் போலிஸார் சென்னை அழைத்துச் சென்று சோதனை நடத்தி, தீவிரமாக விசாரித்தனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாமண்டூரைச் சேர்ந்த ரகு(எ) ரகுபதி(35), ராயபுரம் நாகூர்மீரான்(30), தமீன் அன்சாரி(28), சரண்ராஜ்(30) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ரகு வீட்டிலிருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மிஷின், ஸ்கேனிங் மிஷின் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் புதுச்சேரி அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
newstm.in

