அதிகாலை 2 மணிக்கு கூடுகிறது சட்டப்பேரவை!!
அதிகாலை 2 மணிக்கு கூடுகிறது சட்டப்பேரவை!!

மேற்கு வங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை, அடுத்த மாதம் 7ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கூட்ட, அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, வழக்கத்துக்கு மாறாக, விசித்திரமான நேரத்தில் சபையை கூட்ட முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கவர்னராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் கவர்னர் உரையுடன் துவங்க இருந்தது. இதில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, திரிணமுல் காங்., திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து மேற்கு வங்க சட்டசபையை முடக்கி, கவர்னர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'மேற்கு வங்க அமைச்சரவை அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது' என கவர்னர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட அழைப்பு விடுக்குமாறு, கவர்னர் ஜக்தீப் தன்கருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் பரிந்துரை அனுப்பினார்.
இதை திருப்பி அனுப்பிய கவர்னர், 'அரசியலமைப்பு விதிகளின்படி, சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கான பரிந்துரையை முதல்வர் வழங்க முடியாது. 'அது, மாநில அமைச்சரவையில் இருந்து தான் வர வேண்டும்' என தெரிவித்தார்.

இதையடுத்து, மாநில அமைச்சரவையில் இருந்து பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான பரிந்துரை கவர்னருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதில், சட்டசபையை மார்ச் 7ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கூட்ட பரிந்துரைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட கவர்னர் ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை, மார்ச் 7ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கூட்டுவதற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.
நள்ளிரவுக்கு மேல் சட்டசபை கூடுவது விசித்திரமானது; வரலாறு காணாதது. ஆனாலும், அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்று, அந்த நேரத்தில் சபையை கூட்ட முடிவெடுக்கப்பட்டு உள்ளது' என, தன் சமூக வலைதள பக்கத்தில் கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
newstm.in

