மக்களை கவரும் பதஞ்சலியின் புதிய அவதாரம்.. ரூ.10 லட்சம் வரை உண்டு !!
மக்களை கவரும் பதஞ்சலியின் புதிய அவதாரம்.. ரூ.10 லட்சம் வரை உண்டு !!

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக உள்நாட்டு ஆயுர்வேத பொருட்களை இந்தியாவில் தயாரித்து வெளியிட்டு வருகிறது பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம். அப்பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் அதன் நிறுவனரான யோகா குரு பாபா ராம்தே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதேநேரத்தில், முகேஷ் அம்பானி எவ்வாறு அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறாரோ அதேபோல, பதஞ்சலி நிறுவனமும் பல்வேறு புதிய புதிய துறைகளில் காலடி எடுத்து வைக்கிறது. எனினும் பாபா ராம்தே அவ்வப்போது எதாவது ஒரு கருத்தை கூறி சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். மேலும் பதஞ்சலி மீது ஒரு தரப்பினரிடையே அதிக விமர்சனங்கள் இருந்தாலும் தொழில்துறையில் அதன் வளர்ச்சி மறுபுறம் உயர்ந்துகொண்டுதான் செல்கிறது.
இந்நிலையில் வங்கித் துறையில் கால்பதித்துள்ள பதஞ்சலி நிறுவனம் புதிய கிரெடிட் கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது. மக்களிடையே கிரெடிட் கார்டுகள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த முயற்சியில் பதஞ்சலி நிறுவனம் இறங்கியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் இந்த கிரெடிட் கார்டில் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடாக ரூ.10 லட்சம் வரையில் கிடைக்கும்.

இந்த கிரெடிட் கார்டை வைத்து ஷாப்பிங் செய்தால் நிறைய சலுகைகளைப் பெறலாம் என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி பொருட்களை இந்த கார்டு மூலமாக வாங்கினால் 5 சதவீத தள்ளுபடி உண்டு. அதேபோல, மற்ற பிராண்டு பொருட்களை ஷாப்பிங் செய்வதற்கு ரிவார்டு பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த கிரெடிட் கார்டு சேவைக்காக பதஞ்சலி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாபா ராம்தேவும் பதஞ்சலி நிறுவனத் தலைவருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் தெரிவித்துள்ளனர்.
newstm.in

