Theme Check

அகதிகளாக தனுஷ்கோடி வந்த முதிய தம்பதி.. உணவு, தண்ணீரின்றி மயங்கிய பரிதாபம்..!

அகதிகளாக தனுஷ்கோடி வந்த முதிய தம்பதி.. உணவு, தண்ணீரின்றி மயங்கிய பரிதாபம்..!

அகதிகளாக தனுஷ்கோடி வந்த முதிய தம்பதி.. உணவு, தண்ணீரின்றி மயங்கிய பரிதாபம்..!
X

இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள கடும் விலைவாசி உயர்வால் அங்கிருக்கும் மக்கள் வாழ வழியின்றி தமிழகம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக சென்று வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்திற்கு இதுவரை 90 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள மணல் திட்டையில் இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி இருவர் கள்ளப் படகு மூலம் வந்திறங்கியிருப்பதாக மீனவர்கள் மூலம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு அங்கு சென்ற மரைன் போலீசார், கடற்கரையில் படுத்திருந்த முதிய தம்பதியை மீட்க முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் உணவு, தண்ணீரின்றி மயக்க நிலையில் இருந்தனர்.

இதையடுத்து போலீசார், அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தபோது, அதில் மயங்கிக் கிடந்த பெண்ணின் பாஸ்போர்ட் கிடைத்தது. அதில், அவர் இலங்கையைச் சேர்ந்த பரமேஸ்வரி எனத் தெரியவந்தது.

இதையடுத்து மரைன் போலீசார், கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடும் வெயிலில் மயங்கிக் கிடந்த அகதிகளை பாதுகாக்க அங்கிருந்த மீனவ பெண்களின் புடவையை வாங்கி போலீசார் நிழற்குடை அமைத்தனர்.

மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று மணி நேரம் ஆகியும், அகதிகள் மீட்கப்படாமல் கடற்கரையில் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடி வந்தனர்.

இலங்கையில் வாழ வழியின்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் அலட்சியமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக அந்தப் பகுதி மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஹோவர் கிராஃப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு, இருவரையும் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து மரைன் போலீசார் கூறுகையில், “அகதிகளாக வந்திருக்கும் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது.

அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரம் அவர்கள் சுய நினைவுக்கு வந்த பிறகே தெரியவரும்” என்று தெரிவித்தனர்.

Next Story
Share it