பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது- இம்ரான் கானின் அனைத்து முயற்சிகளும் தோல்வி
பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது- இம்ரான் கானின் அனைத்து முயற்சிகளும் தோல்வி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் கூடியது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார்.
342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று அதிகாலையில் தேசிய சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அவரது தலைவிதி முடிவு செய்யப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான் ஆவார். மேலும், எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை.
இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.