தனியாக கூப்பிட்ட மனைவி.. தற்கொலை செய்துகொண்ட கணவன்..!
தனியாக கூப்பிட்ட மனைவி.. தற்கொலை செய்துகொண்ட கணவன்..!

புதுச்சேரி, அரியாங்குப்பம் வீராம்பட்டினம் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர், பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், தவளகுப்பம் அடுத்த இடையார்பாளையத்தைச் சேர்ந்த விமலா குமாரி என்பவருக்கும் சுமார் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பாலமுருகன் தனது பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, இவரது மனைவி விமலா குமாரி தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் என அடிக்கடி வற்புறுத்தி வந்தார். அதை ஏற்க பால முருகன் மறுத்து விட்டார். இதனால் மாமியார் - மருமகள் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று பாலமுருகன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவிக்கும், தாயார் பூங்காவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இதனை அறிந்த பாலமுருகன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
மனைவிக்கும், தாயாருக்கும் பிரச்சனை ஏற்படுவதை நினைத்து வேதனையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக தெரிகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

