உணவு, மது, டீ-யில் விஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி !!
உணவு, மது, டீ-யில் விஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி !!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரபத்திரன் கொட்டாயை பகுதியில் சக்திவேல்(37), புகழரசி(27) தம்பதி வசித்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு சக்திவேல் விவசாயம் பார்த்துவந்தார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில், புகழரசிக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவினர் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை சக்திவேல் கண்டித்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு புகழரசி தாரமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர், சில மாதங்களுக்கு பிறகு ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி மீண்டும் இருவரையும் சேர்ந்து வைத்தனர். இருப்பினும் முத்துக்குமாருடன் ஏற்பட்ட தொடர்பை புகழரசி கைவிடவில்லை. இதனால் தினமும் மது அருந்தி வரும் சக்திவேல், புகழரசியுடன் தகராறு செய்துவந்தார். ஒரு கட்டத்தில் கணவனின் தகராறை பொறுத்துக்கொள்ள முடியாத புகழரசி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டினார்.
நேற்று முன்தினம் சாப்பாட்டில் 10 தூக்க மாத்திரைகளை தூள் செய்து போட்ட புகழரசி, அதனை சக்திவேலுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பின்னர் குடிக்கும் தண்ணீரிலும் பூச்சிக்கொல்லி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார். அதேபோல் வீட்டில் வைத்திருந்த மதுவிலும் பூச்சி மருந்து கலக்கி கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து டீ கேட்கவே டீயிலும் பூச்சி மருந்தை போட்டு கொடுத்தாராம். நள்ளிரவில் திடீரென சக்திவேலுக்கு வலிப்பு ஏற்படவே முத்துகுமாரை செல்போனில் அழைத்துள்ளார். முத்துகுமார் வந்து பார்த்தபோது சக்திவேல் இறந்து கிடந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்த புகழரசி, தனது மகன் மூலம் கணவனின் தம்பி முத்துசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். தூங்கியவர் அசையாமல் இருப்பதாக புகழரசி கூறவே, சந்தேகமடைந்த முத்துசாமி கொளத்தூர் போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் புகழரசி, முத்துக்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து இருவரையும் கொளத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
newstm.in

