காதலுக்காக ஆணாக மாறிய பெண்… ஆனால்!!
காதலுக்காக ஆணாக மாறிய பெண்… ஆனால்!!

மதுரையில் பெண் ஒருவர், தன்னை காதலித்த மற்றொரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யவைத்து, பின்னர் ஏமாற்றி பிரிந்து சென்றுள்ளார்.
வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா என்பவருக்கும் ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்திலா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல்படையில் வேலைசெய்து வருகிறார்.
நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவரின் வீட்டிற்கும் தோழிகளாக பழகுவது தெரிந்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அப்போது செந்திலா, ஜெயசுதாவிடம் ஆணாக மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாறிக்கொள்ள அறுவைசிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி, கடந்த டிசம்பர் 2021-இல் உடல் உறுப்பை அறுவை சிகிச்சையும் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியும் போட்டு வந்துள்ளார் ஜெயசுதா.
அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஜெயசுதா என்கிற பெயரை ஆதிசிவன் என மாற்றி, இருவரும் தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் திருமணமும் செய்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர் புகாரும் கொடுத்தனர்.

புகாரின்பேரில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் செந்திலா ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும், தனது பெற்றோருடன் செல்வதாகவும் கூறிவிட்டார். காதலிக்காக ஆணாக மாறிய ஜெயசுதா தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார். தனக்கு உரிய நீதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
newstm.in

