மாணவர்களுக்கு இவர்கள் பாடம் நடத்தலாம்.. அரசு அதிரடி உத்தரவு..!
மாணவர்களுக்கு இவர்கள் பாடம் நடத்தலாம்.. அரசு அதிரடி உத்தரவு..!

அரசுப் பள்ளிகளில் செயல்படும் எல்கேஜி வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஆயாக்கள் என்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் 2381 அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி - யுகேஜி மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
எல்கேஜிக்கு மூன்று வயதும், யுகேஜிக்கு நான்கு வயதும் நிரம்பிய குழந்தைகளை சேர்க்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க வேண்டும்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணி இயக்குநரகம் வழங்கும் புத்தகங்களை பயன்படுத்தி அங்கன்வாடி ஆயாக்கள் மற்றும் உதவியாளர்கள் பாடம் நடத்த வேண்டும். அங்கன்வாடிகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை இந்த அடிப்படையில் கற்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை இருந்தால் குழந்தைகளுக்கு அதை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், அங்கன்வாடி மையங்களை வகுப்பறையாக பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர் இல்லாவிட்டால், மாவட்ட கலெக்டரிடம் கூறி பணியாளரை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

