வரும் 25-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் ஓய்வூதியம் கிடைக்காது..!
வரும் 25-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் ஓய்வூதியம் கிடைக்காது..!

பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுவோர் வரும் 25-ம் தேதிக்குள் தங்கள் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர ஓய்வூதிய திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆண்டு அடையாளம் (Annual Identification) மற்றும் வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மே 17-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே, வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை பொது சேவை மையங்களை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யலாம்.
உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்தை கண்டறிய https://findmycsc.nic.in/ என்ற இணையத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

