Theme Check

பெண் பயணிகளிடம் இப்படி நடக்கக் கூடாது.. கண்டக்டர்களுக்கு அரசு கடிவாளம்..!

பெண் பயணிகளிடம் இப்படி நடக்கக் கூடாது.. கண்டக்டர்களுக்கு அரசு கடிவாளம்..!

பெண் பயணிகளிடம் இப்படி நடக்கக் கூடாது.. கண்டக்டர்களுக்கு அரசு கடிவாளம்..!
X

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி திமுக வெற்றி பெற்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்கள் கட்டணமில்லாமல் டவுன் பஸ்களில் பயணம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி முதல், பெண்கள் மற்றும் மாணவிகள் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இருப்பினும், பஸ்களில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ‘இலவச பயணம் என்பதால் பஸ் ஸ்டாப்களில் பெண்கள் மற்றும் மாணவிகள் நிற்பதைக் கண்டால் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.

அப்படியே பஸ்களில் ஏற்றினாலும், அவர்களை மரியாதை குறைவாக பேசி ஏளனமாக நடந்து கொள்கின்றனர்’ என்று, அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, ஒவ்வொரு போக்குவரத்து கழக பஸ் டெப்போக்களிலும் உள்ள டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கி, போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பயணிகள் பஸ்சுக்காக காத்து நிற்கும்போது பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பஸ்சை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

பஸ்சை குறித்த நிறுத்தத்தில்தான் டிரைவர் நிறுத்த வேண்டும். நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

கண்டக்டர்கள் வேண்டும் என்றே பஸ்சில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடக்கூடாது.

வயதான பெண்கள் இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் அவர்களைக் கண்காணித்து அதன்பின்னர் டிரைவருக்கு விசில் கொடுக்க வேண்டும்.

பஸ்சை, பேருந்து நிறுத்தத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்த வேண்டும். பக்கவாட்டில் நிறுத்தக் கூடாது.

பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும்.

டிரைவர் இடது பக்க கண்ணாடியைப் பார்த்து, யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் பஸ்சை இயக்க வேண்டும்.

பஸ் புறப்படும்போது பயணிகள் ஓடி வந்தால் பஸ்சை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

மாணவ - மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் பஸ்களில் ஏறி, இறங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறும், படிக்கட்டில் நின்றவாறும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

பஸ் நிறுத்தம் வருவதை குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகள் இறங்குவதற்கு தயார்படுத்த வேண்டும்.

பணியில் இருக்கும்போது டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

பஸ் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இரண்டு படிக்கட்டுகளும் தனது பார்வையில் படும்படியான இடத்தில் கண்டக்டர் இருக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it