திருப்பூர் மேயர் பதவி... அழுத்தம் கொடுப்பாரா கிருத்திகா உதயநிதி?
திருப்பூர் மேயர் பதவி... அழுத்தம் கொடுப்பாரா கிருத்திகா உதயநிதி?

திருப்பூர் மேயர் பதவியை தனது தோழியின் கணவருக்கு கிருத்திகா உதயநிதி பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நகராட்சி தலைவர்கள், மேயர் உள்ளிட்டவர்களுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை 60 வார்டுகளில் 37 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 23 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, அதிமுக வார்டு உறுப்பினர் ஒருவர் திமுகவில் இணைந்துள்ளதால், திமுகவின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மேயர் ரேஸில், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
இதில், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு அமைச்சர் துரைமுருகனின் அதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், துரைமுருகன் மூலமும் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்ததை வைத்தும் மேயர் பதவிக்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

அதேபோல், அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளராக இருக்கும் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனும் மேயர் பதவியை கேட்டு முயற்சிகளை செய்து வருவதாக கூறுகிறார்கள்.இதில், வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமாரின் மனைவியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் நெருங்கிய தோழிகள்.
இதனால், கிருத்திகா மூலமாக உதயநிதிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது மேயர் பதவியை பெற்றுவிட வேண்டும் என தினேஷ்குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களாகவே தினேஷ்குமார் சென்னையில் முகாமிட்டு திருப்பூர் மேயராகும் முயற்சிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
newstm.in

