சுற்றுலா பயணிகளே, திருவள்ளுவர் சிலைக்கு போகாதீங்க..!
சுற்றுலா பயணிகளே, திருவள்ளுவர் சிலைக்கு போகாதீங்க..!

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலின் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறையின் மீது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
இந்தச் சிலை அமைக்கும் பணி கடந்த 1990-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, 1.1.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை வேறெங்கும் இல்லை என்ற பெருமையை இந்த சிலை பெற்றுள்ளது.
கடலில் அமைந்துள்ள இந்த சிலை உப்புக் காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2004, 2008, 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் ரசாயனக் கலவை பூசப்பட்டது. 5-வது முறையாக 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு ரசாயனக் கலவை பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி இன்று (6-ம் தேதி) முதல் தொடங்க உள்ளது. இந்த பணிகள் சுமார் 5 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த பணிகள் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

