போக்குவரத்து நெரிசலா..?: உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..!
போக்குவரத்து நெரிசலா..?: உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..!

சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் எப்போதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 7 வது மாடியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய திரை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சாலைகளில் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகள் இந்த திரையில் தெளிவாக தெரியும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பச்சை, ஆரஞ்ச், சிவப்பு, அடர் சிவப்பு ஆகிய 4 வண்ணங்கள் திரையில் தெரியும் அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருந்தால் திரையில் பச்சை, ஆரஞ்ச் நிறம் எரியும். அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்கள் தோன்றும்.
இதனையடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நெரிசல் சரி செய்யப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 9003130103 என்ற செல்போன் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் வாட்ஸ்அப் வசதி உள்ளது. இதில் பொதுமக்கள் புகார் செய்தால் உடனடியாக கூகுள் மேப் மூலம் கண்காணித்து போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று சென்னை டிராஃபிக் போலீஸ் என்ற ட்விட்டர் கணக்கிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் புகார்களை பதிவு செய்தால் 5 நிமிடத்தில் நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

